Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப் பேரவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்த சூழலில், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அதே போல, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் தே.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகத்திடம் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார். தவெகவினர் தொகுதிக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வாக்குகளை நிச்சயமாக வாங்குவார்கள்.
அதே சமயம் வலுவான வேட்பாளர்களாக இருந்தால், இரண்டாம் இடத்திற்கு கூட வருவார்கள். இன்னும் சிறப்பான வேட்பாளர்களாக இருந்தால், கொஞ்சம் தொகுதியை அவர்கள் பிடிப்பார்கள். இது மறுக்க முடியாத உண்மை. திமுக வாங்கும் வாக்குகளை அவர்கள் பிரிப்பார்கள். மேலும், மற்ற கட்சிசாரா இளைஞர்களின் வாக்கும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “தஞ்சாவூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் தஞ்சை தொகுதி நிச்சயமாக முன்னேற்றமடையும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால், மத்தியிலும், மாநிலத்திலும் தனித்தனியே தேர்தலை நடத்துவது வீண் விரயம், வீண் செலவு தான்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' - அதேபோல அதிலே மூன்றிலே ஒரு பங்கு பெண்களுக்குக் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இடங்கள் குறையாது என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஆகவே, மாநிலத்தில் இருக்கின்ற தொகுதிகள் அதிகமாக்கப்படுமே தவிர, மூன்றிலே ஒன்று கூடுதலாக (Additional) கொடுக்கப் போகிறார்கள். எனவே, இதிலே எந்தவிதமான பாதிப்பும் நமக்கு இல்லை. ஆகவே இதை வரவேற்கலாம்” என அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம், புதிய நீதிக் கட்சி தென்மண்டல பொதுச் செயலாளர் ஸ்ரீபதி செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN