Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 ஏப்ரல் (ஹி.ச)
2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள சூழலில், மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் வேட்பாளர் சுந்தர்.சி இருவருக்கும் இடையே வாக்கு சேகரிப்பில் கடும் வார்த்தை மோதல் நிலவுகிறது.
இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 56-வது வார்டு முரட்டன்பத்திரி பகுதியில், திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப். 11) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
விமானத்திலிருந்து இறங்கியது முதல் தற்போது வரை என்ன ஒரு 500 பேரிடம் பேசியிருப்பாரா? அவர்களிடம் மட்டும் பேசியதை வைத்து, கருத்து கூறிக் கொண்டிருக்கிறார் சுந்தர்.சி.
அரசியலில் எப்போதும் நாகரீகத்தை கடைபிடித்து வாழ்பவன் நான். சட்டமன்றத்தில் கூட யாரையும் எதிர்த்துப் பேசும் போது,
தனிப்பட்ட தாக்குதல் செய்வது கிடையாது. இதே மத்திய தொகுதியில் கிராமர் சுரேஷ், ஜோதி முத்துராமலிங்கம் என என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்து கூட, நான் தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதில்லை. ஆனால், இன்று பேச வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
அதற்கு காரணம், இந்த தீய சக்திகள் தான். மீண்டும் மீண்டும் பொய்யையே கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களுக்கே இது நன்றாக தெரியும். இந்த முறை டெபாசிட் வாங்குவார்களா? என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் டெபாசிட் கூட வாங்க விடாமல் செய்ய வேண்டியது வாக்காளர்களாகிய உங்களது கடமை.
ஏனென்றால் இது மதுரையின் சுயமரியாதை. அடுத்து பெரிய நடிகராக ஆவதற்கு இந்த களத்தை பயன்படுத்துகிறார்கள்.
இதன் தயாரிப்பாளர் ஏ.சி. சண்முகம் என்றால், அதற்கான நடிகர் தான் இந்த சினிமா சங்கி. அவர்களது அடுத்த தொழிலுக்காக, எல்லோரும் சேர்ந்து இயங்குகிறார்கள். இவர்களை போன்ற கபட வேடதாரிகளை மதுரையின் வரலாறு என்றைக்குமே ஏற்றுக் கொண்டதில்லை.
எனவே, நெஞ்சை தட்டி எல்லோரும் சொல்வோம். நா மதுரக் காரன்டா.. இதுல நீ யாருன்னு ஒரு கை பாத்துருவோம் எனப் பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN