Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
வரும் 21ம் தேதி மாலை வரை அதாவது 10 நாட்கள் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விஜய் நாளை (ஏப்ரல் 12) குமரி மாவட்டம் வருகிறார்.
அவர் கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு அனுமதிகோரி கட்சியின் நிர்வாகிகள் போலீசாரிடம் மனு அளித்திருந்தனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதாவது மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக த.வெ.க. மாநில நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 11) குமரி மாவட்டத்திற்கு செல்கின்றனர்.
அவரது தலைமையில் தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b