Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06.04.2026 அன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் 4023 பேர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் எண்ணிக்கை அதிகமானதால் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை தெரிவு செய்து அனுப்பும் பணி இன்று தொடங்கியுள்ளது.
அதேபோல வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் தகவல் சீட்டு சீட்டு வினியோகிக்கும் பணி நாளை தொடங்கி 17ந் தேதிக்குள் முடிக்க
திட்ட மிடப்பட்டுள்ளது. பூத் சிலிப்பை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது அதற்கு மாற்றாக ஆதார் உள்பட 12 ஆவணங்களை ஓட்டு போடுவதற்கு பயன்படுத்தலாம்.
வாக்காளர் தகவல் சீட்டு கியூ.ஆர்.கோடு உடன் அச்சடிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பெயர், வரிசை எண் மற்றும் பாகம் எண் பெரிதாக அச்சிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எளிதாக சென்று வாக்களிக்கும்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது.
பூத் சிலிப் வழங்கும் பணி வீடு வீடாக தொடங்கப்படுகின்ற நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தால் 2 முறை வாக்குச் சாவடி அலுவலர் வீட்டிற்கு வருவார். அப்பொழுதும் யாரும் இல்லை என்றால் அருகிலுள்ள வீடுகளில் தகவல் தெரி வித்துவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.
குடும்பத்தில் உள்ள தலைவரோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பூத் சிலிப்பை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் மொத்தமாக சென்னையில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b