Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 11 மணியளவில் நமோ செயலி மூலம் காணொலி வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதில் பங்கேற்க தொண்டர்கள் முன்பதிவு செய்யுமாறு கட்சித் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடலில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் பூத் கமிட்டி உறுப்பினர்களின் பொறுப்புகள், தேர்தல் தயாரிப்பு பணிகள், பிரச்சார மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இதனுடன், பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்த உள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தொடர்ந்து, ஏப்ரல் 18-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பாஜக அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த நிகழ்வுகள் கட்சித் தொண்டர்களுக்கு ஊக்கமாகவும், தேர்தல் வியூகத்தில் முக்கிய கட்டமாகவும் பார்க்கப்படுகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ