வாக்கு சேகரிப்பின் போது ஆராத்தி எடுத்தவர்களுக்குப் பணம் - ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களைக் கண்டு ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்
ஈரோடு, 11 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் புகார்களும் பரபரப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இன்று கிருஷ்ணம்பாளையம் பகுதியில் மதச்சார்பற்ற தேசிய கூட்டணி வ
ஆரத்தி


ஈரோடு, 11 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் புகார்களும் பரபரப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

இன்று கிருஷ்ணம்பாளையம் பகுதியில் மதச்சார்பற்ற தேசிய கூட்டணி வேட்பாளர் மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின் போது, வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கோபிநாத், இன்று காலை முதல் கிருஷ்ணம்பாளையம், கக்கன் நகர் மற்றும் கமலநகர் உள்ளிட்ட முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணிக் கட்சிகளான திமுக, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவற்றின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உடன் சென்றனர்.

வேட்பாளர் வீதி வீதியாகச் சென்றபோது, அந்தந்தப் பகுதி பெண்கள் அவருக்கு ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, வேட்பாளர் தரப்பைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள், ஆராத்தி எடுக்கும் ஒவ்வொரு தட்டிற்கும் தலா 100 ரூபாய் வீதம் ரகசியமாக வழங்கிக் கொண்டே வந்தனர். வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரச்சாரத்தை ஒட்டி அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் கேமராக்கள், பணம் வழங்கப்படுவதைக் காட்சிப்படுத்தத் தொடங்கின. இதைக் கவனித்த வேட்பாளர் தரப்பு நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்காமல் இருக்க, திடீரென பணம் வழங்குவதை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாக நகர்ந்து சென்றனர்.

நிர்வாகிகள் திடீரென சென்றதால், ஆராத்தி எடுத்துவிட்டுப் பணம் கிடைக்காத ஒரு சில வாக்காளர்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

மற்றவர்களுக்குக் கொடுத்தது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி அவர்கள் ஆவேசமாகப் பேசத் தொடங்கினர்.

வாக்கு சேகரிக்க வந்தவர்கள் பாதியிலேயே கிளம்பிச் சென்றதாலும், தங்களுக்கு உரிய தொகை கிடைக்காததாலும் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பு நிலவியது.

தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையிலும், பகிரங்கமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam