Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கடந்த ஆண்டு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் வேர் சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
அப்போது சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் பயன்படுத்திய கூர்மையான கருவி தவறுதலாக நோயாளியின் உடலுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அருண்குமாருக்கு, மூன்று நாட்களுக்கு பிறகு இயற்கை உபாதை கழிக்கும் போது அந்த கருவி வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் மருத்துவ அலட்சியமாகும் என குற்றம் சாட்டி, அவரது மனைவி சுகன்யா, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.33 லட்சம் இழப்பீடு கோரி சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மருத்துவ அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு இருந்ததை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தது.
இதையடுத்து, மனுதாரருக்கு மருத்துவ அலட்சியத்திற்காக ரூ.5 லட்சமும், மேல்சிகிச்சைக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு, மருத்துவ சேவையில் கவனக்குறைவு ஏற்படுத்தும் விளைவுகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ