குமாரபாளையம் அருகே அதிமுக இளைஞர் மீது கொலை முயற்சி – 6 பேரிடம் போலீசார் விசாரணை
நாமக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அதிமுகவை சேர்ந்த இளைஞர் மீது மர்ம கும்பல் கொலை முயற்சி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ரமேஷ் , நேற்று நள்ளிரவில் தன
போலீசார் விசாரணை


நாமக்கல், 12 ஏப்ரல் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அதிமுகவை சேர்ந்த இளைஞர் மீது மர்ம கும்பல் கொலை முயற்சி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ரமேஷ் , நேற்று நள்ளிரவில் தனது பணிகளை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அக்கரகாரம் பகுதியில் திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், அதிக வெடி மருந்துகள் கொண்ட கல்லு வெடியை வீசி தாக்குதல் நடத்தியதுடன், அரிவாளால் வெட்ட முயன்றது.

திடீர் தாக்குதலில் தப்பிக்க முயன்ற ரமேஷ், தலையை குனிந்தபோதும் அரிவாள் வெட்டு தலையின் மேற்பகுதியில் பட்டதால் தீவிரமாக காயமடைந்தார். தாக்குதலால் தடுமாறி கீழே விழுந்த அவர், உயிர் காக்க உதவி கோரி கதறியதாக கூறப்படுகிறது.

அப்பகுதி பொதுமக்கள் சத்தமிட்டதும், மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பின்னர், காயமடைந்த ரமேஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 6 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்ததா அல்லது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam