ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடரும் - பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத் , 12 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ப
ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடரும் - பாகிஸ்தான் அறிவிப்பு


இஸ்லாமாபாத் , 12 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 8) அதிகாலையில் அறிவித்தார்.

இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, நேற்று (ஏப்ரல் 11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.

சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையேயான தற்போதைய உயர்நிலைப் பேச்சுவார்த்தை எந்தவொரு திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த போதிலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து எளிதாக்கப் போவதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 24 மணி நேரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் கூறுகையில்,

தூதுக் குழுக்களுக்கு இடையேயான தீவிரமான மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்கு இஸ்லாமாபாத் மத்தியஸ்தம் செய்தது.

நானும், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும் இணைந்து, இரவு முழுவதும் தொடர்ந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தததோடு இன்று (ஏப்ரல் 12)காலை வரை தொடர்ந்தது.

மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டும். வரும் நாள்களில் தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிகழும் முதல் நேரடி சந்திப்பாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b