ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, 12 ஏப்ரல் (ஹி.ச.) டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘அம்பேத்கருக்காக ஓடு அரசியலமைப்புக்காக ஓடு – மாரத்தான் 2026’ நிகழ்ச்சியை புதுடெல்லியில் இன்று காலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் கா
Run for Ambedkar, Run for the Constitution – Marathon 2026


புதுடெல்லி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘அம்பேத்கருக்காக ஓடு அரசியலமைப்புக்காக ஓடு – மாரத்தான் 2026’ நிகழ்ச்சியை புதுடெல்லியில் இன்று காலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது,

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தங்கள் மீது விமர்சனங்கள் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை அரசியலமைப்புதான்.

ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் அம்பேத்கரையும், அவர் உருவாக்கிய அரசியலமைப்பையும் திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

இந்தியாவில் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய அரசியலமைப்பின் அடிப்படை தூண்களை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் என்ன நாடகம் ஆடினாலும், அம்பேத்கர் சிலைக்கு முன் கைகூப்பி வணங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டாலும், உள்ளுக்குள் அரசியலமைப்பை அழிக்கும் வேலையைத்தான் செய்கின்றனர்.

அரசியலமைப்பை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

இந்த மாரத்தான் வெறும் ஓட்டம் அல்ல. இது நீதிக்காக, சமத்துவத்திற்காக, அரசியலமைப்புக்காக நாம் நடத்தும் ஒரு அறப்போராட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூல்லி, முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாரத்தானில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b