Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 12 ஏப்ரல் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாஜக சார்பில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திமுக ஆட்சி ஒரு குடும்பத்தினுடைய ஆட்சி. ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதற்காக, கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தலை சந்திக்க செலவழிக்கப்படுகிறது.
திமுக அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை பணத்தை வழங்குகின்றனர். ஏன் கோவையில் வாக்குகளைப் பெற செந்தில் பாலாஜி தங்க நாணயம் கொடுக்கிறார்? இதையெல்லாம் மீறித் தான் இரட்டை இலை, தாமரை, குக்கர் போன்ற சின்னங்கள் மேலோங்கி நிற்கின்றன, என்றார்.
ஜனநாயகன் படம் லீக் குறித்து பேசிய அவர், சென்சார் போர்டு என்பது தனிச்சையாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அது தனது கடமையை செய்யும். தம்பி ஜோசப் கிருஷ்ணாவா? ஜோசப் விஜயா? அவருடைய கட்சியில் உள்ள ஒருவர் கூறும் கருத்துக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.
திமுக தொடர்ந்து வெல்லும் என மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு,
திமுக அப்படி எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளது? திமுக எத்தனை முறை தொடர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளது? திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததே கிடையாது. கருணாநிதியாலேயே தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை.
இன்றைக்கு மெட்ரோ திட்டம் வேண்டுமென்றால் மத்திய அரசு உதவி செய்தால் மட்டுமே, திட்டத்தை கொண்டு வர முடியும். ஆனால், திமுக அரசால் ஒரு திட்ட அறிக்கையை கூட முறையாக போட்டு கொடுக்க முடியவில்லை. திமுக அரசு மக்களை கவர வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துகிறது.
அதனை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல, அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
திமுகவின் ரூ.8 ஆயிரம் கூப்பன் குறித்த கேள்விக்கு,
திமுக வழங்குவதாக கூறும் கூப்பன் திட்டங்கள் ஏமாற்று முயற்சியாகும்.
மக்கள் அதை நம்பமாட்டார்கள். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் சூழ்நிலையால் பதற்றத்தில் உள்ளார்.
ஏனென்றால், திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்த வரலாறு இல்லை. இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
அதன்படி, NDA கூட்டணி இந்த தேர்தலில் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN