தவெக விஜய்க்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம்
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறிவைத்து பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் கமல்ஹாசன் எம்.பி. பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்க
Kamal


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறிவைத்து பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் கமல்ஹாசன் எம்.பி. பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி முதல் ஏப்ரல் 20- ஆம் தேதி வரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கமல் ஹாசனின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான சுற்றுப்பயண விவரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை நிலைய செயலாளர் செந்தில் ஆறுமுகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி சென்னை துறைமுகம், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், ஏப்ரல் 18- ஆம் தேதி தியாகராய நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

ஏப்ரல் 19- ஆம் தேதி அவிநாசி, கோயம்புத்தூர் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், ஏப்ரல் 20- ஆம் தேதி திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், லால்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உள்பட சென்னையில் 8 தொகுதிகளிலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியிலும், அவிநாசி தொகுதியிலும் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பது கவனிக்கத்தக்கது. மொத்தம் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், 13 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதனிடையே, கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த மக்கள் நீதி மய்யம், ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை.

அதேபோன்று தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN