Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 12 ஏப்ரல் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் காவிரி டெல்டாவில் அதிக நெல் உற்பத்தி களமாக விளங்குவது நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி. நல்ல நீரோட்டம் கொண்டு, வளமாக இருப்பதால் இந்த ஊர் ‘நல்ல நிலம்’ என பெயர்பெற்று, பின்னர் நன்னிலம் என்று மருவியுள்ளது.
இந்தத் தொகுதியில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலில் எமதர்மனுக்கென தனி சந்நிதி உள்ளது. ராகு, கேது வழிபட்ட பாப்பூர நாதர் கோயில் அமைந்துள்ள திருப்பாம்புரம் கோயில், என்கண் முருகன் கோயில், பிரசித்தி பெற்ற பாடைகட்டி மாரியம்மன் கோயில், தமிழகத்திலேயே சரஸ்வதி தேவிக்கு ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்ட கூத்தனூர் சரஸ்வதியம்மன் கோயில் போன்ற ஆன்மிக தலங்கள் உள்ளன.
இத்தொகுதியில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் ஆகிய 3 பேரூராட்சிகள், வலங்கைமான் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள், குடவாசல் ஒன்றியத்தில் 49 ஊராட்சிகள், நன்னிலம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன.
வாக்காளர்கள் நிலவரம்:
ஆண்கள் - 1,31,094
பெண்கள் - 1,33,352
மூன்றாம் பாலினத்தவர் - 16
மொத்தம் - 2,64,462
இந்தத் தொகுதியில் வெள்ளாளர், வன்னியர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வாாக்காளர்கள் பெருமளவு வசிக்கின்றனர். வாழ்க்கை, கொல்லாபுரம், ஆவூர், கோவிந்தங்குடி, நன்னிலம், குடவாசல் பகுதிகளில் பரவலாக இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் 1967 முதல் இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும், தமாகா 2 முறையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜ் 1,03,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிராமன் 99,213 வாக்குகள் பெற்று 4,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வேட்பாளர்கள் நிலவரம்:
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ சார்பில் உதயசூரியன் சின்னத்தில் முகமது முபாரக் போட்டியிடுகிறார். 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தற்போது 4-வது முறையாக களம் காண்கிறார்.
இதேபோல, தவெக சார்பில் எஸ்.பிரபாகரன், நாதக சார்பில் டி.தேன்மொழி, சசிகலா கட்சி சார்பில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ராஜா மற்றும் சுயேச்சைவேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதில், அதிமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்எல்ஏவான ஆர்.காமராஜ், ‘‘கடந்த 15 ஆண்டுகளில் நன்னிலம், குடவாசலில் அரசு கல்லூரி, வலங்கைமானில் பாலிடெக்னிக் உட்பட பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளேன்.
கரோனா பெருந்தொற்றின்போது நானும் கரோனாவால் பாதித்து தொகுதி மக்களின் பிரார்த்தனையால் உயிர் பிழைத்தேன்.
எஞ்சியுள்ள வாழ்வையும் நன்னிலம் மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்’’ என சென்டிமென்டாக பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.
எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக், திமுக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை மக்களிடத்தில் எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகள்:
வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு செயல் படக்கூடிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
குடவாசலில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். குடவாசலில் இடிக்கப்பட்ட நூலகத்தை விரிவுபடுத்தி கட்டித்தர வேண்டும்.
செல்லூர் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். குடவாசல் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
நன்னிலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தரமான சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்.
குடவாசல், நன்னிலம் வழித் தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பகுதி விவசாயத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒரு புதிய வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
கிராமப்புறங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் நவீன விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நன்னிலம் அருகே தென்னஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஊரகப் பகுதிகளில் தரமான சாலை வசதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்பது மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளது.
நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த கொற்கை கால்நடைப் பண்ணை கலைக்கப்பட்டு சிப்காட் (SIPCOT) வளாகமாக மாற்றப்படுவதற்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து, பண்ணையை மீண்டும் செயல்படுத்த கோருகின்றனர்.
இத்தொகுதியில் அதிகளவில் வசிக்கும் பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில், திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில் போன்ற புகழ்பெற்ற தலங்களின் மேம்பாடு மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளதால், அதைச் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்
Hindusthan Samachar / vidya.b