கன்னியாகுமரி வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய் சைக்கிளில் ரோட் ஷோ
கன்னியாகுமரி, 12 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். முதன் முறையாக சட்டமன்ற தேர்த
கன்னியாகுமரி வருகை தந்த த.வெ.க தலைவர் விஜய் சைக்கிளில் ரோட் ஷோ


கன்னியாகுமரி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழகம் முழுவதும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய அளவில் பிரசாரம் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவர் இன்று மதியம் கன்னியாகுமரி வருகை தந்தார்.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விஜய், விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வருகை தந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக மதியம் கன்னியாகுமரி வந்தார்.

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான எஸ்.ஆர். மாதவன் தலைமையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.

வழிநெடுக விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கன்னியாகுமரியில் மகாதானாபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய் சைக்கிளில் சுற்றி வந்தார். இருபக்கமும் திரண்டு நின்ற தொண்டர்களை பார்த்து விஜய் கை அசைத்தார். தொண்டர்கள் இதனை பார்த்து ஆர்ப்பரித்தனர்.

இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் ரோடு ஷோவாக சென்று வாக்கு சேகரிக்கிறார். மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை அவர் ரோடு ஷோ செல்கிறார்.

இந்த பிரசாரம் முடிந்ததும் அவர், மீண்டும் கார் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் வாயிலாக சென்னை திரும்புகிறார்.

Hindusthan Samachar / vidya.b