தென்மாநிலங்களை ஒழித்துக்கட்டும் சதிச்செயலை கைவிடுங்கள் - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி
சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.) நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வ
தென்மாநிலங்களை ஒழித்துக்கட்டும் சதிச்செயலை கைவிடுங்கள் - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி


சென்னை, 12 ஏப்ரல் (ஹி.ச.)

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஏப்ரல் .16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவளிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் பயன்படுத்தி தென் இந்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இந்திய அரசியலில் அதிகாரமற்றவர்களாக,குரலற்றவர்களாக மாற்றும் பாஜகவின் துரோகச் செயலைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மட்டும் நிறைவேற்றுங்கள்.தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களை ஒழித்துக்கட்டும் உங்கள் சதிச்செயலை கைவிடுங்கள்.

எமது மக்களின் உழைப்பில் வரும் வரிப்பணத்தை வாங்கிக்கொண்டு ,எமது அரசியல் அதிகாரத்தைப் பறிப்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அநீதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b