Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)
நெல்லுக்கான ஊக்கத்தொகை குறித்து விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நெல்லுக்கான ஊக்கத்தொகை குறித்து மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறானது என்றும், அரசின் தோல்விகளை மறைக்கும் முயற்சிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நெல்லுக்கான கொள்முதல் விலையுடன் வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக முதலமைச்சர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அன்புமணி குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் கடிதத்தில் அத்தகைய எந்த உத்தரவும் இல்லையெனவும், அது ஒரு ஆலோசனை மட்டுமே என்றும் அவர் விளக்கினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதுபோல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலான ஊக்கத்தொகை வழங்குவது மாநிலங்களின் அதிகாரம் என்பதையும் அன்புமணி சுட்டிக்காட்டினார்.
நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை பிற பயிர்களுக்கு மாற்றிப் பயன்படுத்தலாம் என்ற ஆலோசனை மட்டுமே கடிதத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கடிதம் ஜனவரி 9ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்த நிலையில், மூன்று மாதங்கள் கழித்து தற்போது இதை அரசியல் பிரச்சினையாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
திமுக அரசு உழவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும், நெல் கொள்முதல் விலையும் வாக்குறுதியை விட குறைவாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி குற்றம்சாட்டினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், உழவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ