Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 13 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (ஏப்ரல் 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க 100 அடி நீளமுள்ள கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b