ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை அமலில் இருக்கும் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிரு
Fishing ban to remain in force from April 15 to June 14


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 - ன் கீழ் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 தேதி முதல் ஜீன் 14 வரை மீன்பிடி தடைக் காலம் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மீன்பிடி தடைக் காலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மீன்பிடி துறைமுகம் / தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைக் காலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைகாலம் அமலுக்கு முன்னர் 14.04.2026 இரவு 12 மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்பிட வேண்டும் 14.04.2026 இரவு 12 மணிக்கு பிறகும் கரை திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை சென்னை மாவட்ட மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b