“500 கோடி பெற்றது திமுக” – ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிரடி குற்றச்சாட்டு
சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவர்,
Jose


சென்னை, 13 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர்,

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் முடிவுகளை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார்.

லால்குடி தொகுதியில் போட்டியிடும் தனது தாயார் குறித்து உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்கள் புரிதல் இல்லாமல் செய்யப்பட்டவை எனக் கூறினார்.

திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த அவர், தங்களிடம் இருந்து 500 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளதாக திமுகவே ஒப்புக்கொண்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தங்களது நிறுவனத்தின் வருமானம் மற்றும் வரி விவரங்களை எடுத்துக்காட்டிய அவர், முதல்வர் சொத்து மதிப்பை குறைத்து காட்டுவதாகவும் விமர்சித்தார். மேலும், திமுக மட்டும் அல்லாமல் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் நிதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசுகையில்,

பாஜக தங்களை கூட்டணியில் சேர அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், திமுக-காங்கிரஸ் இடையே மோதல் தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் கூறினார். தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் கேட்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பத்தை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், “ஜனநாயகன்” படம் கசிவு தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீது குற்றஞ்சாட்டிய அவர், அவர் பாஜக மீது அவதூறு பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.

நீட், டெல்லி அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சினைகள் புரிவதில்லை என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ