மதுரையில் ஆட்டோ LPG கியாஸ் தட்டுப்பாடு - வரிசையில் நின்று LPG கியாஸ் நிரப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள்
மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆட்டோக்களுக்கான எரிவாயு (Auto LPG) விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதார
கேஸ் தட்டுப்பாடு


மதுரை, 13 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக

ஆட்டோக்களுக்கான எரிவாயு (Auto LPG) விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி

வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான

ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவல நிலை

ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான LPG நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால்,

மதுரை புறநகர் பகுதியான மதுரை - திண்டுக்கல் சாலையில் உள்ள சமயநல்லூர்

பகுதியில் செயல்படும் தனியார் LPG நிரப்பும் நிலையத்தை நோக்கிப் படையெடுத்து

வருகின்றனர்.

இதன் காரணமாக, மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள்

நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

ஒரு ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்பக் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மணி

நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக ஆட்டோ ஒட்டுநர்கள் வேதனை

தெரிவித்துள்ளனர்.

இதனால் அன்றாடம் பயணிகளை ஏற்றி, இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் கடும் வருமான

இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில்

நாங்கள் அன்றாடம் உழைத்தால் மட்டுமே எங்கள் குடும்பத்திற்கு உணவு கிடைக்கும்.

கேஸ் நிரப்பவே அரை நாளைச் செலவழித்தால், மீதமுள்ள நேரத்தில் எப்படிச்

சம்பாதிப்பது? வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்குத்

தள்ளப்பட்டுள்ளோம் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் LPG கியாஸ் தடையின்றி கிடைப்பதைஉறுதி

செய்ய வேண்டும்.

என ஆட்டோ ஒட்டுநர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam