Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 13 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் விளா பூஜைகள் நடைபெற்றன.
உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு இடையே முதலில் சுவாமி தேரும், அதனைத் தொடர்ந்து அம்மன் தேரும் இழுக்கப்பட்டன. நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர்கள் நிலை வந்து சேர்ந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ, பாஜக மாநிலத் தலைவரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்திரன் மற்றும் தமாகா மாவட்டத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b