ஈரானின் 158 கப்பல்களை அழித்துவிட்டோம் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்க்டன், 13 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பத
ஈரானின் 158 கப்பல்களை அழித்துவிட்டோம். - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


வாஷிங்க்டன், 13 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இந்நிலையில், கடந்த வாரம் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும், ஈரானும் சம்மதம் தெரிவித்தன.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் ஏப்ரல் 11 ஆம் தேதி 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசியதாவது:

ஈரான் மிக மோசமான நிலையிலும், விரக்தியிலும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்களா? இல்லையா? என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை.

அவர்களின் ராணுவ பலம் அழிந்துவிட்டது. அவர்களின் ஏவுகணைக் கையிருப்புகள் பெருமளவில் தீர்ந்துவிட்டன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் அவர்களின் திறன் பெருமளவில் முறியடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொண்டோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கான பாலங்களை முற்றிலுமாக உடைத்துவிடவில்லை.

அவர்கள் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்போம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அவர்களின் முழுக் கடற்படையும் நீரில் மூழ்கிவிட்டது. ஈரானின் 158 கப்பல்களை அழித்துவிட்டோம்.

இன்று (ஏப்ரல் 13) காலை 10 மணி முதல் ஹோர்முஸ் நீரிணை முற்றுகை அமலுக்கு வரும். ரஷியா மற்றும் சௌதி அரேபியாவைவிட அமெரிக்காவிடம் அதிக கச்சா எண்ணெய் உள்ளன.

தற்போது பல நாடுகளின் சரக்கு கப்பல்கள் அமெரிக்க கடற்கரையை நோக்கி எண்ணெய்க்காக வந்து கொண்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b