‘தாமரை வாக்குறுதி’ - தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று (14.04.2026) வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்க
BJP Releases Election Manifesto


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று (14.04.2026) வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

‘தாமரை வாக்குறுதி’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில்,

தைப்பூசம் மாநில விழாவாக அறிவிக்கப்படும்.

மின்சார இரு சக்கர வாகனம் வாங்க தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்.

அதிக பக்தர்கள் வரும் கோவில்களில், தினமும் 2 மணி நேரம் உள்ளூர் மக்களுக்கு பிரத்யேக தரிசனம் ஒதுக்கப்படும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.

சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றை தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தமிழகத்தில் 10 நகரங்களை தேசத்தின் முதல் 100 தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்வோம்.

ஆண்டுக்கு 3 விலையில்லா காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், அவை பொங்கல், தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.

பாலியல், போக்சோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பஸ்கள் மற்றும் பல்கலைக்கழங்களில் 100 சதவீத கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீண்டும் தீபம் ஏற்றுவதையும், அது முழுவதும் பின்பற்றுவதையும் உறுதி செய்வோம்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை, தமிழக போதைப்பொருள் ஒழிப்புத்துறை, கடலோர போதைப்பொருள் புலனாய்வு பிரிவு துரித நடவடிக்கைக்காக பிரத்யேக உதவி எண், சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, மாம்பழம், வாழை மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு உறுதி.

அளிக்கப்பட்ட சந்தை ஆதரவு வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் நிதியுதவி வழங்குவோம்.

மாவட்ட அளவில் பிரமாண்ட எஃகு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம்.

பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு,நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ.50 லட்சம்வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும்.

மீனவர்களுக்கு நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்துவோம். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இஎம்ஐ செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஏஐ மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் செயல்முறைப் பயிற்சிகளுடன் கூடிய வாராந்திரப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

முதன்முறை தொழில் தொடங்கும் 2,000 இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ரூ.15 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜிஎஸ்டி தொடர்பான சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும்.

என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் கூறுகையில்,

பாஜக சார்பில் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பாசிச, மக்கள் விரோத மற்றும் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கான பல்வேறு உத்திகளுடன், என்.டி.ஏ. (NDA) தலைமையிலான மெகா கூட்டணி, தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்.

திமுக ஒரு வாக்குறுதியைக் கூட சரியாக நிறைவேற்றவில்லை. சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலையும், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்களுமே அவர்களது ஆட்சிக்கு சான்றாகும்.

அதிமுக ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இப்போது நாங்கள் எங்களுடையதை வெளியிட்டுள்ளோம். என்.டி.ஏ. நிச்சயம் ஆட்சி அமைக்கும்.எனத் தெரிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறுகையில்,

தமிழகம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தொட்டில் அது என்று நான் எப்போதும் சொல்வேன். ஒவ்வொரு இந்தியனும் அதைப் பற்றி பெருமிதம் கொள்கிறான்.

இன்று, இந்தப் பண்பாட்டுத் தலைநகரம் குற்றங்களின் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் தோல்வியடையச் செய்தது திமுக தான்.

இந்தத் தேர்தலில், மக்கள் இந்த புனிதமற்ற திமுகவை அம்பலப்படுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள். நாங்களும் பார்ப்போம். இது ஒரு குடும்பக் கட்சி. இதில் ஸ்டாலின் தலைமையில் இருக்கிறார்.

உதயநிதி வாரிசு, கனிமொழி கூட்டாளி, மற்றும் சபரீசன் மேலாளர். இப்படித்தான் இந்த கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.

திமுக பெண்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டது. இளைஞர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டது.

விவசாயிகளின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b