Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 14 ஏப்ரல் (ஹி.ச.)
பிஹார் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
அதனை தொடர்ந்து நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதன்படி, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயககக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 5ஆம் தேதி நிதிஷ் குமார் மனுத்தாக்கல் செய்து போட்டியிட்டார். அதனை தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி அரசியலை நோக்கி பயணிக்க இருக்கிறேன் என நிதிஷ் குமார் அறிவித்தார்.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார் 10-04-26 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பிஹார் அமைச்சரவைக் கூட்டம் இன்று(ஏப்ரல் 14 ) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, நிதீஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுமர் சையது அடா ஹஸ்னைனிடம் அளித்தார்.
நிதீஷ் குமார், பிஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக சாம்ராட் சௌதரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிஹார் மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவைத் தலைவராக சாம்ராட் சௌதரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் பாஜகவின் மத்திய பார்வையாளரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சௌதரி நாளை(ஏப்ரல் 15) பதவியேற்கவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b