தமிழ் புத்தாண்டை முன்னிட்டு - திருச்செந்தூர் கோவிலில் சித்திரை விசு கனி காணும் நிகழ்வு
திருச்செந்தூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிச
'Chithirai Vishu Kani'


திருச்செந்தூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் உச்சிகால அபிஷேகங்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன.

காலை 10:00 மணிக்கு சண்முகருக்கு விசேஷ அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் ஆகம விதிகளின்படி நடைபெற்றன. புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், கோவிலில் உள்ள நாழிக்கிணறிலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலின் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரு பெரிய கண்ணாடியின் முன்பு மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், நவதானியங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டு தினத்தில் இவற்றைக் காண்பது அதிர்ஷ்டம் தரும் என்பதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இதனை வழிபட்டுச் சென்றனர்.

புத்தாண்டு சிறப்புப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளைத் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

Hindusthan Samachar / vidya.b