Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலரும் இந்த இனிய நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
பல்லாண்டுகளாக சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழ் மக்கள், அந்த நாள் மாற்றப்பட்டபோது மனமுடைந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் அறிவித்து மக்களின் மனதை குளிர்வித்தார்.
மேலும், புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெற்று வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என இப்புத்தாண்டில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளுடன் கூடிய புதிய உத்வேகம் உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பராபவ’ ஆண்டில் மக்களின் வாழ்வில் வளம், ஆரோக்கியம், சந்தோஷம் நிரம்பி, எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறி, வெற்றிகள் தொடர வேண்டும் என்றும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இத்துடன், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் நல்வழியில், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தனது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ