Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 14 ஏப்ரல் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறத்தை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த விக்னேஸ்வரன்(15) மற்றும் தமிழ்ச்செல்வன்(15) ஆகிய இரண்டு மாணவர்களும் அருகில் உள்ள அகரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிக்கு இன்று அங்குள்ள குட்டை தண்ணீரில் குளிக்க சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது விக்னேஷ்வரனும் தமிழ்செல்வனும் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த நீரேற்ற நிலையத்தின் அருகே குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டாருக்கு செல்லும் ஒயரின் மீது தமிழ்ச்செல்வன் கால் வைத்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது மின் மோட்டார்க்கு செல்லும் ஒயரில் உரிய பாதுகாப்பு இல்லாமல் டேப் அடித்து அப்படியே விடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கால் வைத்த தமிழ்ச்செல்வன் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.
அவனுடன் குளிக்கச் சென்ற விக்னேஸ்வரன் மின்சாரம் பாய்ந்த துடிதுடித்துக் கொண்டிருந்த தனது நண்பன் தமிழ்செல்வனை பார்த்து கூச்சலிட்டு அருகாமையில் இருந்தவர்களை காப்பாற்ற அழைத்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு வந்த பொதுமக்கள் மின்மோட்டார் சென்று கொண்டிருந்த மின்சாரத்தை துண்டித்து தமிழ்செல்வனை மீட்டு உள்ளனர்.
ஆனால் அதற்குள் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து மணலூர்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை போலீசார் தமிழ்ச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் மின்மோட்டாரின் வயர் இணைப்பை சரியாக பராமரிக்காததால் இந்த உயிரிழப்பு நடந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN