மதுரை எய்ம்ஸ் அக்டோபரில் திறக்கப்படும் - அண்ணாமலை வாக்குறுதி!
மதுரை, 14 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக் கட்சி சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி. மற்றும் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுர
அண்ணாமலை


மதுரை, 14 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக் கட்சி சார்பில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர் சி. மற்றும் திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் தீவிரப் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மதுரை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான எய்ம்ஸ் மருத்துவமனை வரும் அக்டோபர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், அந்தத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்ப்பேன் என்று கூறிவிட்டு, தற்போது பரப்புரையில் தன்னைக் குறிவைத்துத் தரக்குறைவான முறையில் தாக்கி பேசுவதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது குற்றம் சாட்டினார்.

மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் தெரிவித்த அவர், முந்தைய மேயர் பதவி விலகிய பிறகு புதிய மேயரை நியமிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேள்வி எழுப்பினார். நிர்வாகத் திறமை பற்றிப் பேசும் அமைச்சர், நிதி முறைகேடுகளில் தொடர்புடைய நபர்களைத் தனக்கு நெருக்கமாக வைத்திருப்பதாக அண்ணாமலை சாடினார்.

திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாகப் பேசிய அண்ணாமலை, அங்குள்ள மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

ஆன்மீக உணர்வுகளுக்குத் தடையாக இருக்கும் இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா தடையின்றி நடைபெற அதிமுக கூட்டணி வேட்பாளருக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P