அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்
புதுடெல்லி, 14 ஏப்ரல் (ஹி.ச) அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 14) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மத்தியப் பிரதேசத்தில் வ
President Murmu Pays Tribute on Ambedkar's Birth Anniversary


புதுடெல்லி, 14 ஏப்ரல் (ஹி.ச)

அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 14) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மத்தியப் பிரதேசத்தில் வறுமையில் வாடிய தலித் மகர் குடும்பத்தில் பிறந்த பி.ஆர். அம்பேத்கர், ‘பாபாசாகேப்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியாக விளங்கிய இவர், ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியும், மாபெரும் சமூக சீர்திருத்தவாதியுமான பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

அம்பேத்கர் சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், ஆழ்ந்த சிந்தனையாளர், சட்ட அறிஞர் மற்றும் சமத்துவ சமூக அமைப்பின் உறுதியான ஆதரவாளர் ஆவார். நாட்டைக் கட்டமைப்பதிலும் சமூக நீதியிலும் அவர் ஆற்றிய வாழ்நாள் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அவர், அவர்களுக்கு ஆதரவாக வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை வழங்கினார்.

ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்கான பாதையைக் காட்டியது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்பு உரிமைகளையும் வலுப்படுத்துவதில் முன்னணி பாத்திரம் வகித்தார்.

பெண் கல்விக்கும் பெண் உரிமைகளுக்கும் அம்பேத்கர் முன்னுரிமை அளித்தார். அவரது பன்முக பங்களிப்புகள், நாட்டின் சேவைக்கும் வளர்ச்சிக்கும் எதிர்கால தலைமுறையினர் தீவிர பங்காற்ற தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

இந்த நாளில், பாபாசாகேப் அம்பேத்கரின் இலட்சியங்களை நம் வாழ்வில் ஏற்று, நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான தேசத்தை உருவாக்கப் பங்களிக்க உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b