Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை,மாதவரம்
ராஜாஜி தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு நேற்று மாலை சென்ற இளம்பெண்ணிடம், அங்கிருந்த ஊழியர் கைரேகை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
கைரேகை பதிவு செயல்படவில்லை என கூறிய அவர், அருகே வருமாறு அழைத்து, பயோமெட்ரிக் கருவியில் கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து, இளம்பெண் அருகில் சென்று பதிவு செய்து கொண்டிருந்த போது, திடீரென அந்த ஊழியர் அவளின் உடலில் தகாத முறையில் தொடந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனடியாக கடையிலிருந்து வெளியேறி, தனது கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த கணவர் உடனே கடைக்கு சென்று, குறித்த ஊழியரை பிடித்து தாக்கி, பின்னர் மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னை அருகிலுள்ள நன்மங்கலம் கோவில்பதாகை பகுதியை சேர்ந்த நல்லதம்பி (56) என்ற ரேஷன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ