Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஏப்ரல் (ஹி.ச.)
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று விசுவாவசு ஆண்டு நிறைவடைந்து
பராபவ ஆண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
புத்தாண்டையொட்டி பக்தர்கள் கோவில்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று (ஏப்ரல் 14) அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் மிகச்சிறப்பாக நடைபெற்றன. குடும்பத்துடன் வருகை தந்த பக்தர்கள், இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டி முருகனை வழிபட்டு மனநிறைவுடன் சென்றனர்.
அதே போல் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன்பின்னர், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b