Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெட்டிபாளையம், நேரு நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விஜய் வெங்கடேஷ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக, விஜய் வெங்கடேஷை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, அவர் பிரச்சாரம் முடித்து சென்ற பின்னர், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் தர்மலிங்கம், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது தவெக நிர்வாகி தேர்தல் விதிகளுக்கு புறம்பாக பணம் கொடுத்தது உறுதியானதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் தர்மலிங்கம் புகார் அளித்தார்.
இதன்பேரில் வெள்ளித்திருப்பூர் போலீசார் அவர் மீது BNS176 பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் அடுத்து என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அந்தியூர் தவெக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN