2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - சிதம்பரம் தொகுதி கள நிலவரம்
கடலூர், 14 ஏப்ரல் (ஹி.ச.) கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறிய தொகுதியாக விளங்கும் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியானது சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலாப் ப
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - சிதம்பரம் தொகுதி கள நிலவரம்


கடலூர், 14 ஏப்ரல் (ஹி.ச.)

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறிய தொகுதியாக விளங்கும் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியானது சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலாப் பகுதி, பரங்கிப்பேட்டை பாபா கோயில் அடங்கிய சுற்றுலா ஸ்தலமாகவும், கல்வி ஸ்தலமாக திகழ்கிறது.

இத்தொகுதியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி வாழுகின்றனர். சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பேரூராட்சிகளையும், பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதையும், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேல்புவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளையும் உள்ளடக்கி இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண் 1,13,561

பெண் 1,17,645

மூன்றாம் பாலினத்தவர் 30

மொத்த வாக்காளர்கள் 2,31,236

பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதி.

இந்த தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வன்னியர், ஆதிதிராவிடர்கள், பிள்ளை, யாதவர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் உள்ளனர்.

அரசியல் நிலவரம்:

தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கே.ஏ.பாண்டியன் 3-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார்.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வேட்பாளராக பேட்டியிடுகிறார்.

நாதக சார்பில் தமிழ், தவெக சார்பில் நெடுஞ் செழின் உட்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இருப்பினும் அதிமுக வேட்பாளர் கே.ஏ. பண்டியனுக்கும், திமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கும் தான் நேரடி போட்டி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் 3-வது முறையாக கே.ஏ.பாண்யனை வெற்றி பெற வைத்து தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு களப்பணியாற்றி வருகின்றனர்.

திமுக தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி தொகுதிக்கு புதியவர் என்றாலும் திமுகவின் தெம்போடும் கூட்டணிக் கட்சிகளின் உறுதுணையுடன் திமுக அரசின் சாதனைகளை கூறி களப்பணியாற்றி வருகிறார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு:

உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

சிதம்பரத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய நீதிமன்றக் கட்டிடத்தை புனரமைத்து, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு குறைந்த வாடகையில் தங்கும் அறைகள் கட்டித்தர வேண்டும்.

சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் அமைத்துத்தர வேண்டும். பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். பிச்சாவரம் சுற்றுலா மையத்தை நவீன மயமாக்கி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றவேண்டும்.

சிதம்பரம் அண்ணா மலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் இதய சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள தரிசு நிலங்களில் சூரிய சக்தி மூலம் மின்சார வசதி பெறும் வகையில் சூரியசக்தி மின் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் கரையை உயர்த்தி அகலமாக மாற்றி போக்குவரத்து எளிதில்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிட வசதியை ஏற்படுத்திட தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் ஆகிய எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடம் உள்ளது.

Hindusthan Samachar / vidya.b