Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 14 ஏப்ரல் (ஹி.ச.)
கோடை காலம் வந்தாலே, தர்பூசணி பழ சீசன் ஆரம்பித்துவிடும். அதிக நீர்ச்சத்தும் மிகவும் லேசான இனிப்பு சத்தும் கொண்ட தர்பூசணி பழங்கள் , கோடைகாலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் இயற்கையின் அற்புதமான கொடையாகும்.
தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள முடியும், அத்துடன் உடனடியாக புத்துணர்ச்சியும் பெற முடியும்.
தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 51,830 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்படுகிறது. விழுப்புரம், திண்டுக்கல், மற்றும் திருப்பூர் (உடுமலைப்பேட்டை பகுதி) நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் தர்பூசணி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சொட்டு நீர் பாசன முறையில் தர்பூசணி சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் கோடைக்காலங்களில் மாற்று பயிர்களை ஆர்வமாக செய்து வருகின்றனர்.
தர்பூசணிக்காய் சாகுபடி செய்தால், மூன்று மாதத்தில் அறுவடை செய்துவிடலாம்.
இதுகுறித்து, விவசாயி நாகராஜ் கூறுகையில்,
விதைகளை விதைக்கும் முன்பு, நிலத்தை உழுது, இயற்கை உரம் மற்றும் ரசாயன உரம் இட்டு, நீர் பாய்ச்சி, விதை ஊன்றப்படுகிறது. மூன்றே நாளில், விதை முளைத்து, செடி மற்றும் களைகள் உருவாகின்றன.
களையை அகற்றி, மீண்டும் உழுது, நீரை தேக்கும் வகையில், பாத்தி கட்ட வேண்டும். மூன்று மாதங்கள் நிலம் ஈரப்பதத்திற்காக, நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி, உரமிடுவது அவசியம். விதைக்கப்பட்ட நாளில் இருந்து, 35வது நாளில், பூ பூக்கும்.
அடுத்த சில நாட்களில் பிஞ்சு காய்த்து, நாளடைவில் பெருக்கும். மூன்றே மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட, அதிகபட்சமாக 80,000 - 90,000 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில், 25 டன் வரை தர்பூசணி அறுவடை செய்யலாம்.
இங்கு அறுவடை செய்யப்படும் தர்பூசணிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தர்பூசணி சாகுபடிக்கு 18 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசு அதிகப்படியான சதவீதத்தில் மானியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயி நாகராஜ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b