Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திர பிரதேசம் , 15 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநிலம்,
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜுவ்வலதின்னே மீன்பிடி துறைமுகத்தை ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிட்டு,அங்குள்ள மீனவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
மாநிலத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி அநியாயமாக உள்ளது. கடவுள் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
கண் மூடி திறக்கும் நேரத்தில் மீண்டும் நம் அரசு அமையும்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.26 ஆயிரம் கோடி செலவில் துறைமுக வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மாநிலத்தில் 4 புதிய துறைமுகங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 10 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் 6 மீன் இறக்குமதி மையங்கள் மூலம் மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2024 மார்ச் 12-ந்தேதி ஜுவ்வலதின்னே துறைமுகம் மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
1,250 இயந்திரப்படகுகளை வழங்க திட்டமிட்டிருந்தோம்.
மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் அந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கும்.
மச்சிலீப்பட்டணம், மூலபெட்ட துறைமுகப் பணிகள் 35 சதவீதம் முடிந்துள்ளன.
காகிநாடா, ராமாயபட்டணம் துறைமுகப் பணிகளும் விரைவாக முன்னேறின. ஆனால் இத்திட்டங்களை தற்போதைய அரசு ஏன் நிறைவேற்றவில்லை?
இந்த திட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு நாட்டுக்கு அர்ப்பணித்தும் ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது.
இருந்தபோதும், மீனவர்களுக்கு இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மீனவர்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை.
ஜுவ்வலதின்னே பகுதியில் இருந்து மீனவர்களை அகற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.
அமைச்சர் லோகேஷ் விஜயத்திற்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் தொடர்புடையவர்கள் மீது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அதிகாரத்தில் இருப்பவர்களே இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்.
இன்னும் மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சி வரும்.
ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜுவ்வலதின்னே மட்டுமல்ல, மாநிலத்தின் அனைத்து மீன்பிடி துறைமுகங்களும் மீனவர்களுக்கே சொந்தமானவை,
அவற்றை யாராலும் பறிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA