மெரினாவில் அனுமதியின்றி பிரச்சாரம் - பிக்பாஸ் ஜூலி உள்ளிட்ட 4 பேருக்கு வழக்கு பதிவு
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச) சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் திமுகக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, நடிகை மரியா ஜூலி (33) உள்ளிட்ட நான்கு பேர் மீது மெரினா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வள
Julie


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் திமுகக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, நடிகை மரியா ஜூலி (33) உள்ளிட்ட நான்கு பேர் மீது மெரினா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளசரவாக்கம், காமராஜர் சாலை, ஆழ்வார் திருநகர் பகுதியில் வசித்து வரும் ஜூலி, செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமான அவர், தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக திமுகக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஜூலி, தவெக தலைவர் மற்றும் அவரது கட்சியினரை கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக கட்சியினர் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்வினை வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த சூழலில், நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரை காமராஜர் சாலைக்கு வந்த ஜூலி, ஒளவையார் சிலை பின்புறம் உள்ள கடற்கரை சர்வீஸ் சாலையில் திமுக ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது “Vote for DMK” எனும் பதாகைகள் மற்றும் “Vulgar warriors எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜூலி உட்பட நான்கு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, சமூக வலைத்தளங்களில் தன்னை குறிவைத்து தகாத வார்த்தைகளில் விமர்சித்து, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஜூலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு நல்லாட்சி வேண்டும் என்ற நோக்கில் தனிப்பட்ட முறையில் திமுகக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதாகவும் ஜூலி விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி, எழுத்து மூலம் உறுதி பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக கூறி தேர்தல் அதிகாரி சரவணன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரம் செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ஜூலி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ