அருணாச்சல பிரதேசத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - நாளை முதல் தொடக்கம்
இட்டாநகர், 15 ஏப்ரல் (ஹி.ச.) அருணாச்சல பிரதேசம் முழுவதும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு கட்டம் நாளை (ஏப்ரல் 16-ஆம் தேதி) முதல் தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த டிஜிட்டல் நடவடிக்கையில் பங்கேற்கும
அருணாச்சல பிரதேசத்தில்  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - நாளை முதல் தொடக்கம்


இட்டாநகர், 15 ஏப்ரல் (ஹி.ச.)

அருணாச்சல பிரதேசம் முழுவதும் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய கணக்கெடுப்பு கட்டம் நாளை (ஏப்ரல் 16-ஆம் தேதி) முதல் தொடங்கவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த டிஜிட்டல் நடவடிக்கையில் பங்கேற்குமாறு அதிகாரிகள் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் (HLO) ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இதன்மூலம் குடும்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக முக்கிய விவரங்களை சமர்ப்பிக்கலாம்.

குடும்ப அமைப்பு, வீட்டு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான அணுகல் குறித்த துல்லியமான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம். சரியான நேரத்தில், சரியான தரவுகளை சமர்ப்பிப்பது கணக்கெடுப்பின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கியம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சுய கணக்கெடுப்பு கட்டத்தைத் தொடர்ந்து, மே 1 முதல் மே 30 வரை களப்பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த காலகட்டத்தில் பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தரவுகளை சரிபார்த்து, சேகரிப்புப் பணியை நிறைவு செய்வார்கள்.

நாட்டின் மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கும் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கொள்கை முடிவுகள், வள ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழிகாட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின்போது பகிரப்படும் அனைத்து தனிநபர் தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புள்ளியியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர். தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான தேவையான விவரங்களை தயாராக வைத்திருக்குமாறும், கள ஆய்வின்போது கணக்கெடுப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, இதனை குடிமைக் கடமையாகக் கருதி குடிமக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b