எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பெங்களூர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப் பே
Madras High Court


சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி பெங்களூர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 23-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்து வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரச்சாரங்களால் தமிழ்நாடு தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கக் கோரி அதிமுகவில் இருந்த பெங்களூர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் போது, கரோனா காலத்தில் மு.க. ஸ்டாலின் போயி இருப்பார் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பால்டாயில் குடித்தது எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறது. அப்பவே போயிருக்கனும் மேலோகத்திற்கு, இங்கே இருந்து கொண்டு நம்மை உயிர வாங்கிட்டு இருக்கு என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் குறித்தும் அவதூறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என பெங்களூர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூர் புகழேந்தி தாக்கல் செய்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN