எரிபொருள் வரி தற்காலிகமாக நிறுத்தம் - கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு
கனடா, 15 ஏப்ரல் (ஹி.ச.) ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியதிலிருந்து உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகைக்கு
எரிபொருள் வரி தற்காலிகமாக நிறுத்தம் -  கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு


கனடா, 15 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியதிலிருந்து உலகளாவிய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.

உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகைக்கு உள்ளானதால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஐ தாண்டியது. இதன் நேரடி தாக்கமாக, கனடாவில் பெட்ரோல் விலை ஓராண்டில் லிட்டருக்கு $1.32-ல் இருந்து $1.80-க்கு மேல் உயர்ந்துள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டரசு எரிபொருள் கலால் வரி வரும் திங்கட்கிழமை முதல் தொழிலாளர் தினம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த முடிவு கார்னிக்கு அரசியல் ரீதியாக முக்கியமானது. டொராண்டோவில் இரண்டு மற்றும் மொன்ட்ரியல் புறநகரில் ஒரு தொகுதியில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, லிபரல் கட்சி திங்கட்கிழமை இரவு பாராளுமன்ற பெரும்பான்மையை உறுதி செய்தது.

இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே சட்டங்களை நிறைவேற்றும் பலத்தை கார்னி அரசு பெற்றுள்ளது. 2015-2019 காலகட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு லிபரல் கட்சிக்கு கிடைத்த முதல் பெரும்பான்மை இது.

கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கடந்த வாரம் எரிபொருள் கலால் வரி, தூய எரிபொருள் தரநிலை மற்றும் GST மேல்வரிகளை நீக்கினால் லிட்டருக்கு 25 சென்ட் வரை மிச்சமாகும் என வலியுறுத்தியிருந்தார். ஒரு சராசரி நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஆண்டு இறுதிக்குள் $1,200 வரை மிச்சமாகும் எனவும் அவர் கணித்திருந்தார்.

பதவியேற்றதிலிருந்தே கார்னி “வாழ்கைச் செலவு, வீட்டு வசதி, பொருளாதார மறுமலர்ச்சி” ஆகிய மூன்றையும் முக்கிய முன்னுரிமைகளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அதே நேரம், அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் சர்வதேச ராஜதந்திரத்தையும் கையாள்கிறார். அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் தொடங்கிய வர்த்தகப் போரில், இந்த பெரும்பான்மை பலம் உதவும் என கார்னி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

“ஈரானுடனான போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. கனடாவும் இதற்கு விதிவிலக்கல்ல. எனவே குறுகிய கால அழுத்தத்தை சமாளிக்க ஒரு பாலமாக இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்” என்று கார்னி குறிப்பிட்டார். மேலும், “கனடியர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மென்மையாக்குவதே” அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

கனடா மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் இதே போன்ற நெருக்கடியை எதிர்கொள்கிறது. எரிபொருள் மானியங்களை அதிகரிக்கவும், மின்சார வரிகளை குறைக்கவும் EU திட்டமிட்டு வருகிறது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் திட்டமிடப்பட்ட எரிபொருள் வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

இது ஒரு “பொறுப்பான தற்காலிக நடவடிக்கை” என கார்னி அழைத்தாலும், ஈரான் போர் நீடித்தால் செப்டம்பருக்குப் பிறகு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும், கனடியர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி மென்மையாக்கலாம் என்பதில்தான் அரசின் கவனம் உள்ளது என கார்னி கூறியுள்ளார்.

இந்த வரி விலக்கு மாகாண வரிகளுக்குப் பொருந்தாது என்பதால், முழு நிவாரணம் கிடைக்காது. ஆனால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தொடங்கும் கார்னிக்கு இது ஒரு வலுவான அரசியல் செய்தியை அனுப்புகிறது: நெருக்கடியில் விரைந்து செயல்படும் அரசு என்பதே அது.

Hindusthan Samachar / vidya.b