Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையை அடுத்த மீஞ்சூரில் கல்லூரி மாணவியை கஞ்சா போதை ஆசாமிகள் கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது கண்டன பதிவில்,
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.
போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam