Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை பட்டினப்பாக்கம் அருகிலுள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாக 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் வேலு வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியின் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வேலு, 2021 ஆம் ஆண்டு அந்த வாக்குறுதியை வழங்கி வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ ஆக இருந்தும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என மீனவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், அருகிலுள்ள மீனவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு பட்டா வழங்கி வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
மூன்று ஆண்டுகளுக்கு மீனவர்கள் சார்பாக முன்பு நடைபெற்ற கூட்டத்தில் வேலு கலந்து கொண்டபோதும், மக்களின் குறைகளை முழுமையாக கேட்காமல் சில நிமிடங்களில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் நோக்கில் வாக்கு சேகரிக்க வந்த த. வேலுவுக்கு எதிராக, இன்று 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு முகக்கவசம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வாகனத்தில் இருந்து வேலு இறங்காமல் வாகனத்திலேயே சென்ற நிலையில் மீனவர்கள் கருப்பு கொடியை காண்பித்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில்,
கடந்த தேர்தலில் மீனவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றவர், தற்போது எங்களது கோரிக்கையை நிராகரித்து மீண்டும் வாக்கு கேட்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மீனவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அத்துடன், மீனவர் சமூகத்தினருக்கு எதிராக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கெல்லாம் மூல காரணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் த. வேலு குற்றம் சாட்டினர்.
துணை முதலமைச்சர், வீட்டு வசதி வாரியம், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத த. வேலுவை இந்த தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ