Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 15 ஏப்ரல் (ஹி.ச)
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் ஆண்டு தோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடல் சார்ந்த மீன் வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று தொடங்கி வரும் ஜூன் 14ஆம் தேதி வரை இந்த 61 நாட்கள் காலப்பகுதியில் காரைக்கால் மற்றும் ஏனாம் கடல்பகுதிகளில் மீன்பிடி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கடல் வளங்கள் இனப்பெருக்கம் பெறும் என்பதால், மீன்பிடியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தடை அமல்படுத்தப்படுகிறது.
மேலும், கட்டுமரம் மற்றும் நாட்டு படகுகளை தவிர்த்து, இயந்திர வசதியுடன் இயங்கும் அனைத்து பெரிய மீன்பிடி படகுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் தங்களது படகுகளை கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரிய மீன்பிடி படகுகளை தேங்காய்திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த தடைக்காலத்தை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்தை பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் மீன்பிடித் தொழில் வளம் பெறும் வகையில் இந்த தடைக்காலம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலத்தில் மீனவர்கள் மாற்று தொழில்களில் ஈடுபடுமாறும், அரசு வழங்கும் நிவாரண திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN