Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 15 ஏப்ரல் (ஹி.ச.)
மும்பை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நிலையம் திடீரென மாற்றப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் (சி.எஸ்.எம்.டி.) ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த இந்த எக்ஸ்பிரஸ், தற்போது லோக்மான்ய திலக் டெர்மினஸ் (எல்.டி.டி.) ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த மாற்றம் குறித்து முன்கூட்டியே தெளிவான அறிவிப்பு வழங்கப்படாததால், பல பயணிகள் வழக்கம்போல் சி.எஸ்.எம்.டி. நிலையத்திற்கே சென்றனர்.
பின்னர் ரெயில் எல்.டி.டி. நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிந்த அவர்கள் அவசரமாக அங்கு சென்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல், கூடுதல் செலவு, அவசரப் பயணம் போன்ற சிரமங்களை சந்தித்தனர்.
பலர் கடைசி நேரத்தில் எல்.டி.டி. நிலையத்தை அடைந்து ரெயிலை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மும்பையில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ரெயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த சேவையை நம்பி பயணம் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் போது முன்கூட்டியே தெளிவான அறிவிப்புகள் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA