Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை ரயில்நிலையம் நுழைவு வாயில் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் (40) என்பவர் சைதாப்பேட்டை ரயில் நிலைய வாசலில் தினமும் யாசகம் பெற்று வந்தவர்.
இன்று காலை, அவர் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தீவிர காயமடைந்த முருகனை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முருகன் மீது மர்மநபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் எதனால் நடந்தது, இதில் எத்தனை பேர் தொடர்புடையவர்கள் என்பதற்கான தகவல்கள் இன்னும் தெளிவாகவில்லை.
சம்பவம் நடைபெற்ற பகுதி பொதுமக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடமாக இருப்பதால், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் போலீஸ் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ