Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 15 ஏப்ரல் (ஹி.ச)
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைக்மேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
மட்டப்பாறைக்கு வந்தபோது கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நாயகர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த ஆட்சி பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆட்சியாக செயல்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை, காக்கும் கரங்கள், புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணம், இல்லம் தேடி மருத்துவம், போன்ற திட்டங்களை செயல்படுத்தியதால் பெண்கள் போற்றும் ஆட்சியாக தமிழகத்தில் இன்றுவரை திமுக ஆட்சி உள்ளது.
நிலக்கோட்டையில் மகளிருக்கான கலைக்கல்லூரி, விவசாயிகள் நலன் காக்க சிறுமலை நீர் தேக்கம், நிலக்கோட்டை மக்களுக்கு அணைப்பட்டி பேரணையிலிருந்து குடி தண்ணீர் கொண்டுவரப்பட்டது உட்பட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு தான்.
இப்போது மகளிருக்கு தேர்தல் அறிக்கையில் ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்கப்பட உள்ளது. ஏன் முதல்வர் மகளிரிடம் அந்த கூப்பன்களை வழங்க வேண்டுமென உத்திரவு போட்டிருக்கிறார் என்றால், மகளிர்தான் குடும்ப சூழ்ந்து உணர்ந்து சிக்கனமாக செலவு செய்வார்கள். தங்களுக்கு வேண்டிய வீட்டு உபயோகப் பொருட்களை மட்டும் வாங்குவார்கள்.
நான் எப்போது சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டுமென்று உறுதியான மனநிலையில் இருப்பவன். உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதி அதிக ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று உங்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வார்.
அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN