2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - காட்பாடி தொகுதி கள நிலவரம்
வேலூர், 15 ஏப்ரல் (ஹி.ச.) வேலூர் மாநகராட்சியின் முக்கியப் பகுதியான காட்பாடி, கல்வி, போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது. காட்பாடி ரயில் சந்திப்பு தென்னக ரயில்வேயின் முக்கியமான மற்றும் அதிக வருவாய் ஈட்டும் நிலைய
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - காட்பாடி தொகுதி கள நிலவரம்


வேலூர், 15 ஏப்ரல் (ஹி.ச.)

வேலூர் மாநகராட்சியின் முக்கியப் பகுதியான காட்பாடி, கல்வி, போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்றது.

காட்பாடி ரயில் சந்திப்பு தென்னக ரயில்வேயின் முக்கியமான மற்றும் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் ஒன்று. சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்துள்ள இது, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாலமாகத் திகழ்கிறது. வந்தே பாரத் & சதாப்தி: சதாப்தி மற்றும் வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

காட்பாடியில் அமைந்துள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (VIT) உலகின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்குப் பயில உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.

விண்ணம்பள்ளி அகதீஸ்வரர் ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த சோழர் காலத்துக் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் சிவன் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறுகிறது.

சொர்ணமுகீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு 'ஓடைப் பிள்ளையார்' என்று பெயர். இக்கோவிலின் இறைவன் மீது வைக்கப்படும் சந்தனப் பொட்டு மறுநாள் பொன்னாக (தங்கம்) மாறியதாகத் தல வரலாறு கூறுகிறது.

காட்பாடி வழியாகவே புகழ்பெற்ற ஸ்ரீபுரம் பொற்கோயில் மற்றும் காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்ல முடியும்.

இங்கு 'டெல்' (TEL) வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. பீடி சுற்றுதல் மற்றும் விவசாயம் இப்பகுதி மக்களின் முக்கியத் தொழில்களாக உள்ளன.

இயற்கைச் சூழல் கொண்ட அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் அருவி சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது

வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண் - 1,10,210

பெண் - 1,18,493

மூன்றாம் பாலினத்தவர் - 33

மொத்த வாக்காளர்கள் - 2,28,736

வன்னியர்கள் இப்பகுதியில் சுமார் 25% மக்கள் தொகையுடன் முதன்மையான சமூகமாக உள்ளனர்.

ஆதிதிராவிடர் (பட்டியல் சாதியினர் - SC) சுமார் 17% முதல் 20% வரை உள்ளனர். காட்பாடி நகர பஞ்சாயத்து அளவில் இது 13.73% ஆக உள்ளது.

முதலியார்கள் சுமார் 17% மக்கள் தொகையுடன் முக்கியமான சமூகமாக உள்ளனர்.

எஞ்சிய மக்கள் தொகையில் நாயுடு சமூகத்தினர் மற்றும் கணிசமான அளவில் இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சிறுபான்மையினரும் வசிக்கின்றனர்.

அரசியல் நிலவரம்:

தமிழ்நாட்டில் உள்ள ‘ஸ்டார்’ தொகுதிகளில் ஒன்றாக காட்பாடி உள்ளது. இந்த தொகுதியில் 11-வது முறையாக திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார்.

13-வது முறையாக தேர்தலில் களம் காணும் அமைச்சர் துரைமுருகன், இந்த முறை வெற்றிபெற்றால் இந்தியாவிலேயே அதிகமுறை எம்எல்ஏ ஆனவர் என்ற வரலாற்று பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவார்.

திமுகவில் பல்வேறு மட்டங்களில் முக்கிய தலைமை பொறுப்புகள், நீர்வள துறையில் அபார அனுபவம் வாய்ந்த துரைமுருகனுக்கு கடந்த 2021 தேர்தல் முடிவு ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் கவலையுடன் தெரிவிக்கின்றனர். சுலபமாக வென்று விடலாம் என ஆதரவாளர்கள் சொன்னதை நம்பி பிரச்சார களத்தை கணிக்க தவறி கோட்டை விட்டார் துரைமுருகன்.

மக்களிடம் நேரடி தொடர்பில் இல்லாதது, ஆதரவாளர்களை நம்பியே தேர்தல்களை சந்திப்பது, தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது, கட்டி முடித்தும் திறக்கப்படாத எம்எல்ஏ அலுவலகம் என பல காரணங்களுடன் புதுமுக வேட்பாளரான ராமு, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது, துரைமுருகனுக்கு எதிராக திமுகவினர் சிலரது உள்ளடி வேலைகளால் 2021 தேர்தலில் திமுகவின் வெற்றியை ரசிக்கக்கூட முடியாத அளவுக்கு துரைமுருகனின் 746 வாக்குகள் என்ற ‘மார்ஜின்’ வெற்றி இருந்தது.

2026 தேர்தல் களம்:

நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுகவில் மீண்டும் துரைமுருகன், அதிமுகவில் மீண்டும் ராமு, நாம் தமிழர் கட்சியில் திருக்குமரன், தவெகவில் டாக்டர் சுதாகர் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் கிடைத்த ‘மார்ஜின்’ வெற்றியைவிட இந்தமுறை பெரிய வெற்றியை துரைமுருகனுக்கு பெற்றுத்தர வேண்டும் என ஆதரவாளர்கள் ஒரு பக்கமும், அவரது குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறை வரை தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் கழிஞ்சூர்-தாராபடவேடு ஏரி புனரமைப்பு, சேர்க்காட்டில் புதிய கல்லூரி, புதிய மருத்துவமனை, பாண்டியன் கால்வாய் கட்டுமான பணிக்கு அடிக்கல் என பல்வேறு திட்ட பணிகளை கூறி திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதேநேரம், தன்னை வெளியூர் வேட்பாளர் என யாரும் சொல்லக்கூடாது என்பதற்காக காட்பாடிக்கே இடம்பெயர்ந்த அதிமுக வேட்பாளர் ராமு. 2021-ல் ‘ஜஸ்ட் மிஸ்’சில் விட்டதை பிடிக்க கடந்த 5 ஆண்டுகளாகவே காட் பாடி தொகுதியை சுற்றி சுற்றி வருகிறார்.

மகிமண்டலம் சிப்காட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொன்னை பகுதியில் திமுக பிரமுகர்களின் மணல் கடத்தல் விவ காரங்களை அதிமுக வேட்பாளர் கையில் எடுத்துள்ளார்.

இப்படி திமுக, அதிமுக வேட்பாளர்கள் காட்பாடி தேர்தல் களத்தை உஷ்ணமாக்கி வரும் நிலையில், தவெக வேட்பாளர் டாக்டர் சுதாகர், ரசிகர்கள், இளைஞர்கள் பட்டாளத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார்.

வழக்கம்போல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனி பாதையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

மக்களின் எதிர்பார்ப்புகள்:

காட்பாடியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

காட்பாடி பகுதியில் முடிக்கப்படாத பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கழிஞ்சூரில் ரயில்வே மேம்பாலம்.

வண்டறந்தாங்கல் ஏரியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும், அங்கு மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்பாடியில் இரண்டாவது ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்தில் குறைகள் தொடர்பான மனுக்கள் அளிக்க மக்களுக்கு வாய்ப்பு ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும்.

என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b