நாடாளுமன்றத்தில் மிக வலிமையாக தங்கள் எதிர்ப்பைப் எம்.பி.க்கள் பதிவு செய்வார்கள் - சு.வெங்கடேசன்
திண்டுக்கல், 15 ஏப்ரல் (ஹி.ச.) தொகுதி மறுவரையறை என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், குறிப்பாக திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மிக வலிமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என சு. வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை சா
Su Venkatesan


திண்டுக்கல், 15 ஏப்ரல் (ஹி.ச.)

தொகுதி மறுவரையறை என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், குறிப்பாக திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மிக வலிமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என சு. வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை சாடியுள்ளார்.

தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543ஐ 850 -ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை ஏப்ரல் 16 - 18 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவிருக்கிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடருக்கு திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்றும், இதற்கு எதிராகத் தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடுவார்கள் என்றும் சு. வெங்கடேசன் எம்.பி கடுமையாக சாடியுள்ளார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற போர்வையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா, உண்மையில் தொகுதி மறுவரையறை மற்றும் எண்ணிக்கையைச் சார்ந்தது. 543 ஆக இருக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தும்போது, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மிகப்பெரிய அளவில் குறையும். இதன் மூலம் இந்திய அரசியலில் தென்னிந்தியா அநாதையாக விடப்படும் சூழல் உருவாகியுள்ளது எனச் சாடினார்.

மேலும் அவர் பேசுகையில்,

மறுவரையறை ஆணையத்தின் முடிவே இறுதியானது என்றும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது.

மோடியும் அமித் ஷாவும் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த மசோதாவில் இல்லை. தமிழ்நாட்டை ஒரு அரசியல் காலனியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசியல் சாசனம் 131வது திருத்த மசோதா வரைவு, தென்னிந்தியாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, “இந்த அநீதிக்கு எதிராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள், குறிப்பாகத் திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மிக வலிமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் பாஜகவின் இந்த அநீதிக்கு எதிரான போராட்டக் களமாக மாறும்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தேர்தலைச் சந்திக்கிற நேரத்தில் ஏன் இந்தக் கூட்டத்தொடரை நடத்துகிறார்கள்? ஏனென்றால் அவர்களுக்கு இந்த மாநிலங்கள் ஒரு பொருட்டல்ல. கடந்த 5 நாட்களாக அமித் ஷா எந்தப் பிரச்சாரத்திற்கும் போகாமல் இந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அரசியல் சாசனத்தைக் காக்கிற இந்தப் போராட்டத்தில் மொத்த தமிழ்நாட்டு மக்களும் இணைய வேண்டும் என்று சு. வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN