Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை - தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.
தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b