Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில், மிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று (ஏப்ரல் 15) நேரில் சந்தித்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி, லால்குடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசினார் என்று ஜோஸ் சார்லஸ் மார்டின் குற்றம்சாட்டினார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் புகார் மனுவும் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்டின்,
கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர், இந்த தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தனது தாயாருமான லீமா ரோஸ் மார்டின் குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியுள்ளார். இதன்மூலம் எனது தாயாரின் கண்ணியம், மரியாதை மற்றும் சுயமரியாதையைக் கடுமையாக பாதித்துள்ளன. மேலும், அவை எங்கள் குடும்பத்தின் நற்பெயரையும் களங்கப்படுத்தியுள்ளன.
எங்கள் குடும்பம் அரசியலில் ஈடுபடுவது லாட்டரி தொடர்பான செயல்களை முன்னெடுக்கதான் என்ற நோக்கத்துடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாங்கள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கப் போகிறோம் என்று தவறான கருத்தை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கருத்துக்கள் தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக மீறுகின்றன. குறிப்பாக, அரசியல் எதிரிகளை விமர்சிக்கும்போது அவர்கள் கொள்கைகள் மற்றும் செயல்களை மட்டுமே பேச வேண்டும் என்பதையும், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறக்கூடாது என்பதையும் இந்த விதிகள் வலியுறுத்துகின்றன.
ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குடும்பத்தைக் குறிவைத்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN