ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று விஷு பண்டிகை சிறப்பு பூஜைகள் - பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு
சித்தூர், 15 ஏப்ரல் (ஹி.ச.) மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் மலையாளிகளால் இன்றுஉற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநில
ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று விஷு பண்டிகை சிறப்பு பூஜைகள் - பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு


சித்தூர், 15 ஏப்ரல் (ஹி.ச.)

மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் மலையாளிகளால் இன்றுஉற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரள மாநிலம் சித்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று காலை பக்தர்கள் பெருந்திரளாக கூடி சுவாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான விஷு, செழிப்பு, வளம் மற்றும் நல்ல தொடக்கத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும், வரும் ஆண்டு செல்வச் செழிப்புடனும், வளத்துடனும், அதிர்ஷ்டத்துடனும் அமைய வேண்டி மனமுருகப் பிரார்த்தனை செய்தனர்.

விஷு பண்டிகையின் முக்கிய நிகழ்வான 'விஷுக்கணி' சடங்கு, கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மகாவிஷ்ணு அல்லது அவரது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் திருவுருவச் சிலை, மங்களப் பொருட்களான கொன்றை மலர்கள், அரிசி, நெல், புத்தாடை, தங்கம், வெள்ளரிக்காய், கண்ணாடி, நாணயங்கள் ஆகியவற்றுடன் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

விடியற்காலையில் கண் விழித்ததும் முதல் காட்சியாக இந்த விஷுக்கணியை தரிசிப்பது ஆண்டு முழுவதும் நல்ல பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

கோயில் அர்ச்சகர்கள் செண்டை மேளம், நாதஸ்வரம் போன்ற பாரம்பரிய வாத்தியங்களை முழங்க, பக்தி பரவசமான சூழல் நிலவியது. ஒரு அர்ச்சகர் மகாவிஷ்ணுவின் திருவுருவச் சிலையை ஏந்தியபடி சன்னதியை வலம் வந்தார். அப்போது பக்தர்கள் கிருஷ்ணா... குருவாயூரப்பா... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விஷுக்கைநீட்டம் வழங்கப்பட்டது.

காலை முதலே கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புத்தாண்டு தினத்தில் இறைவனை தரிசித்த மனநிறைவுடன் பக்தர்கள் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b